நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்- நாளை அனைத்து கட்சிகள் கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் மத்திய அரசு நாளை அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

 

லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் ஜனவரி 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடராகும். ஆண்டி முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப் பெரிய அறிவுப்புகள் இதில் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் தேர்தலுக்காக விவசாயிகள், பெண்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி திட்டங்கள் இரண்டு மடங்காக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். அதேபோல ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்ட வரம்பும் உயர்த்தப்படலாம். தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரை- அதாவது 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கூட்டியுள்ள இந்த அனைத்து கட்சிக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *