ரிலீசுக்கு முன்பே உலக சாதனை படைத்த பார்த்திபனின் ‘டீன்ஸ்’! டி.இமானுக்கு படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இமான், இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும் என்றார். “இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன, சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக‌ இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. ‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம். சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

உலக சாதனைகள் அமைப்பின் அலுவலர் ஷெரிபா கூறுகையில், “திரைப்படத்துறையில் புதிய சாதனையை ‘டீன்ஸ்’ படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம். இது ஒரு பெரிய சாதனை,” என்றார். உலக சாதனை அமைப்பின் பிராந்திய தலைமை அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் கூறுகையில், “இந்த சாதனைக்கான சான்றிதழை ‘டீன்ஸ்’ குழுவினருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உலகத்திலேயே முதல் முறையாக இத்தகைய ஒரு முயற்சியை ‘டீன்ஸ்’ குழு வெற்றிகரமாக‌ மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

‘டீன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித் தண்டபாணி, இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் உலக சாதனை படைத்ததற்காக‌ ‘டீன்ஸ்’ குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *