பாண்டியா சகோதரர்களுடன் கூட்டு.. பயிற்சியை தொடங்கிய இஷான் கிஷன்.. இனிதான் ட்விஸ்ட் இருக்கு!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், கடந்த 2 வாரங்களாக பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் மன சோர்வு காரணமாக விடுப்பு கோரினார். இதையடுத்து இந்திய அணியில் இருந்து இஷான் கிஷன் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎஸ் பரத் விளையாடிய சூழலில், அவரின் ஆட்டம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனால் மாற்று விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் அல்லது இஷான் கிஷன் ஆகியோரை அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இதனிடையே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவர் இதுவரை கிரிக்கெட் விளையாட தொடங்கவில்லை. இந்திய அணிக்கு வர வேண்டுமென்றால் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அணிக்கு கம்பேக் கொடுப்பதற்கு முன் நிச்சயம் தீவிர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தான் கூறுகிறோம். அவர் எப்போது ரெடி என்றாலும் நிச்சயம் இந்திய அணி அவரை பயன்படுத்தும் என்று கூறினார்.
இதனால் இந்திய அணி நிர்வாகத்தால் இஷான் கிஷன் பழி வாங்கப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இன்னொரு பக்கம் இஷான் கிஷன் 5 ரஞ்சி டிராபி போட்டிகளை தொடர்ந்து தவறவிட்டுள்ளார். இதனால் இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் தான் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இளம் வீரரான இஷான் கிஷன், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணால் பாண்டியா சகோதரர்களுடன் குஜராத்தில் பயிற்சியை தொடங்கியது தெரிய வந்துள்ளது.
சில வாரங்களாகவே இஷான் கிஷன் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடர் வரை ஓய்வில் இருக்கலாம் என்றும், ஐபிஎல் தொடரில் நேரடியாக மும்பை அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.