துபாயில் பார்ட்டி.. கடுப்பான பிசிசிஐ.. சிக்கலில் இஷான் கிஷன்.. தேர்வு செய்யாததற்கு இதுதான் காரணமா?

மும்பை: மனசோர்வு என்று காரணம் கூறி அணியில் இருந்து விடுவிக்கக் கோரிய இஷான் கிஷன், துபாயில் பார்ட்டியில் ஈடுபட்டது பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலங்களில் இளம் வீரர் இஷான் கிஷன் தான் ஒவ்வொரு தொடருக்கு இந்திய அணியுடன் பயணித்து வந்துள்ளார். வங்கதேச சுற்றுப்பயணம், ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் என்று அத்தனை தொடர்களுக்கும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடிய போட்டிகள் என்றால் மிகவும் குறைவானது தான். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மற்றும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் திறமையை நிரூபித்தும் இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பயணம் மற்றும் பயிற்சி என்று இஷான் கிஷன் ஈடுபட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் தரப்பில் விடுப்பு கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டும், அவரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.