பட்டுக்கோட்டை இளம்பெண் ஆணவப்படுகொலை.. மேலும் 3 பேர் கைது!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வவிடுதியைச் சேர்ந்த பெருமாள்- ரோஜா தம்பதி மகள் ஐஸ்வர்யாவும் பூவாளூரைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த நவீனும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பல்லடம் அருகே வீரபாண்டியில் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், ஐஸ்வர்யாவை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஐஸ்வர்யா பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி ஐஸ்வர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவசரம் அவசரமாக அவரது சடலத்தை எரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி நவீன் புகார் அளித்தார். ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவிடம் நடத்திய விசாரணையில், மகளை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், உறவினர்களான சின்ராசு, முருகேசன், திருச்செல்வம் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களை வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.