வீறு கொண்டு எழுந்த பேடிஎம்! நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. சர்ச்சை ஓவர்? ஏறுமுகத்தில் பங்கு!
மும்பை: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை அடுத்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களும் பெரும் நஷ்டமடைந்தனர். பலர் வந்த விலைக்கு பங்குகளை விற்பனை செய்தனர். இந்நிலையில் பேடிஎம் நிறுவன பங்குகள் மீண்டும் உயர தொடங்கியுள்ளன.
பேடிஎம் நிறுவனத்தின் ஒன்97 கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கானது, பிப்ரவரி 20ஆம் தேதி வர்த்தகத்தில் 5 சதவிகிதம் உயர்ந்தது. அதாவது ஒரு பங்கின் விலை 17.90 ரூபாய் உயர்ந்து 376.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. பேடிஎம் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது, நிறுவனத்தின் கியூ ஆர் கோட் சேவை, சவுண்ட்பாக்ஸ் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மா அறிவிப்பு வெளியிட்டது ஆகியவற்றின் காரணமாக பங்கின் விலை ஏறி இருப்பதாக தெரிகிறது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை அடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. பேடிஎம்மை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா எப்படி வேறு நிறுவனத்துக்கு மாறுவது என குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மார்ச் 15க்கு பிறகும் பேடிஎம் கியூஆர் கோட், சவுண்ட்பாக்ஸ் ஆகியவை செயல்படும் என்றும், வணிகர்கள் இவற்றை மற்றொரு வங்கிக் கணக்குடன் இணைக்கலாம் என்றும் ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் நிறுவனத்தின் மோசமான காலம் முடிவுக்கு வந்துவிட்டது என முதலீட்டாளர்கள் கருதுவதாலும் 3 நாட்களாக பேடிஎம் பங்குகள் ஏறுமுகத்தில் உள்ளன. இன்றை பங்குச்சந்தையில் (பிப்ரவரி 20) தேசிய பங்குச்சந்தையில் பேடிஎம் பங்கு விலை அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது. மூன்று நாட்களில் மட்டும் பேடிஎம் பங்குகளின் விலை 16% உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ஒரு மாதத்தில் 50 % சரிந்த பங்கின் விலை மீண்டும் உயர தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.
அண்மையில் பேடிஎம் நிறுவனம் தனது நோடல் கணக்கை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்து ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியது. ஏற்கனவே பேடிஎம் யுபிஐ செயலி வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வசம் உள்ள வாடிக்கையாளர்களையும் வணிகர்களையும் தக்கவைத்துக்கொள்வதில் பேடிஎம் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
அமலாக்கத்துறை எந்த ஒரு வெளிநாட்டு பரிமாற்ற விதிமீறல்களையும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கண்டறியவில்லை என அண்மையில் ஊடகங்களில் வெளியான தகவலும் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.