மக்கள் ஏமாற்றம்..! தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..!
நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளைப் பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
“இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும். வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்றார் நிதி அமைச்சர்.
திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்; பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்; லட்சத்தீவில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்; வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடரும்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி கொடுக்கப்படும்; வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களைக் கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்; வரும் ஜூலை மாதம் மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்; வளர்ச்சியடைந்த பாரதம் என்ற லட்சியத்துக்கான வழிமுறைகள் அதில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் எளிய மக்களுக்கானது என்று பிரதமர் மோடி கூறினார். இது தொடர்பாக பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும்,” என்றார்.