மக்களே உஷார்..! இனி உங்கள் செல்ல பிராணிகள் பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தால் ரூ.20,000 வரை அபராதம்..!
மதுரை மாநகராட்சியில் மாடு, நாய், பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் கட்டாயமாக அதற்கான கட்டணத்தை செலுத்தி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், உங்களது கால்நடைகள் சாலைபுறங்களில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறு விளைவித்தால் ரூ. 2500 முதல் 20000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, சமீப காலமாக தமிழகத்தில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இது வரை குறைவான அபராதமே விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபராத கட்டணம் அனைத்தும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், ஐந்து நாட்களுக்கும் மேலாக உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத கால்நடைகள் மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சொந்த இடங்களிலேயே வைத்து உரிமையாளர்கள் கால்நடைகளை பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.