மக்களே உஷார்..! தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும்..!
நம் நாட்டில், கோடை காலம், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலம், குளிர் காலம் என, நான்கு வகை பருவகாலங்கள் நிலவுகின்றன. தென் மேற்கு பருவமழை, ஜூன் முதல் அக்டோபர் வரையில் நீடிக்கும். பின், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரம் முதல் ஜனவரி 2ம் வாரம் வரை நிலவும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு, முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.
இதையடுத்து, பிப்ரவரி வரையிலும் குளிர்காலம் நிலவும். இதில், காஷ்மீர், பஞ்சாப், டில்லி, போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், பனியின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதையடுத்து மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை, கோடை காலம் நிலவும். இந்த ஆண்டுக்கான கோடை காலம் நேற்று துவங்கியது. இந்த காலத்தில், தமிழகத்தில், 104 டிகிரி செல்ஷியஸ் அதிகபட்ச வெயில் பதிவாகும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டு கோடைக் காலம் நாடு முழுதும் நேற்று (மார்ச் 1) தொடங்கியது. ஜூன் முதல் வாரம் வரை, வெயிலின் வெப்ப தாக்கம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆட்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 06.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 07.03.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 03.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இந்நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.