சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… காலியாகும் சென்னை : ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
பொங்கல் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7,474 சிறப்பு பேருந்துகளில் மொத்தம் 4,38,308 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கமாக இயக்கப்படும் 4,200 பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் 3,234 என மொத்தம் 7,474 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 4,34,308 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இது கடந்த மூன்று வருடங்களில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகளாகும்.
நேற்று சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்றதால் பேருந்துகள் இயக்க நேரம் கூடுதல் ஆனது. சென்னை- திருச்சிக்கு சாதாரண நாட்களில் 7 மணி நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் 11 மணி நேரம் எடுத்துக் கொண்டதால் பேருந்துகளை சென்னைக்கு அடுத்த நடைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இது தவிர திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பேருந்துகள் மாற்று வழி பாதையில் இயங்கியதும் காலதாமதத்திற்கு ஒரு காரணமானது. இதனால் சென்னையிலிருந்து பயணிகளை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் கூடுதல் நேரம் ஆனது. இந்நிலையில் நேற்று கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளை முழுவதுமாக தங்கள் ஊர்களுக்கு அனுப்ப இன்று காலை 5 மணி வரை ஆனது குறிப்பிடத்தக்கது.