மக்கள் அதிர்ச்சி..! இனி விநாயகா் சிலைகளை கரைக்க கட்டணம் வசூல்..!
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ஆயிரக்கணக்கான விநாயர்கர் சிலைகளை கடல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் கரைப்பது வாடிக்கை. இதில், ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுவதால், அதற்கான விதிமுறைகள் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க, விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும் என, கடந்த ஆண்டு சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழக அரசின் வருவாய், பொது, சுற்றுச்சூழல் துறைகளின் செயலர்கள் இடம்பெற்ற குழு அமைத்து உத்தரவிட்டது பசுமை தீர்ப்பாயம்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விரிவான தீர்ப்பை அளித்துள்ளது. அதில், தீர்ப்பாயம் அமைத்துள்ள அதிகாரிகள் குழு கூட்டத்தை ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் நடத்த வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையான குளங்களை உருவாக்குதல், பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகள் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அனுமதி அளிக்கப்படாத பகுதிகளில் சிலைகளை கரைத்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கேட்போரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டணத்தை தீர்ப்பாய குழு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளை பராமரிக்க செலவிடலாம் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.