அரிசி ஆலைகள் குப்பையில் கொட்டும் அரிசியை உணவுக்கு பயன்படுத்தும் மக்கள்: வெளிவரும் காரணம்

வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அரிசி ஆலைகள் பொதுவாக வேண்டாம் என ஒதுக்கும் அரிசியை பெரும்பாலான மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீனுக்கு தீவனமாக விற்கப்படும்
வடக்கு நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள், அரிசி ஆலைகளால் மீனுக்கு தீவனமாக விற்கப்படும் அரிசியை உணவுக்கு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நைஜீரிய மக்கள் உணவுக்கு என கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்ற அரிசியை மக்கள் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் தற்போது பெரும்பாலான வீடுகளில் இந்த அரிசியையே உணவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அரிசி ஆலைகள் இந்த அரிசியை குப்பையில் கொட்டுவார்கள் அல்லது மீனுக்கு உணவாக்க விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். காலம் மாறிவிட்டதால், அந்த அரிசி தற்போது ஏழை மக்களின் பசி போக்குவதாக கூறுகின்றனர்.
மீன் பண்ணை வைத்திருக்கும் ஒருவர் தெரிவிக்கையில், தமது பண்ணையில் மீன்கள் விரும்பி உண்ணும் அரிசி இது. ஆனால் மக்கள் தற்போது இந்த அரிசியை உணவுக்கும் பயன்படுத்தி வருவதால், அதன் விலை அதிகரித்துள்ளது என்றார்.
70 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது
நைஜீரியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு காணப்படுகிறது. 8 முதல் 10 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் ஒரு மாத காலம் பயன்படுத்தும் 50 கிலோ கொண்ட அரிசி மூட்டையானது தற்போது 53 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 70 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான நைஜீரிய மக்களின் ஒருமாத கால வருவாய் என்பது 50 டொலருக்கும் குறைவு என்றே கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வு காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் போராட்டத்தில் குதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நைஜீரிய மக்களால் afafata என குறிப்பிடப்படும் அரிசியை நோக்கி மக்கள் கவனம் திரும்பியுள்ளது.
சாதாரண சாப்பாடு அரிசி 2.70 டொலருக்கு உள்ளூர் அளவுக்கு விற்கப்படும் நிலையில், afafata அரிசியானது தற்போது 1.69 டொலருக்கு விற்கப்படுகிறது. பல மணி நேரம் பொறுமையாக கல் மற்றும் கழிவுகளை நீக்கிய பின்னரே சமைக்க வேண்டும்.
சுவை இருக்காது என்ற போதும், உயிர் வாழ வேண்டும் என்பதால் வேறு வழியின்றி இந்த அரிசி உணவை சாப்பிட வேண்டும் என் மக்கள் குறிப்பிடுகின்றனர்.