உணவு தேடி காத்துக்கிடந்த மக்கள்… இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கை
காஸாவில் உதவி வழங்கும் இடத்தில் திரண்டிருந்த பாலஸ்தீனிய மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் உணவுக்காக
இச்சம்பவத்தில் குறைந்தது 700 பேர்கள் காயங்கலுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. காசா நகரில் விடியற்காலையில் நடந்த சம்பவத்தில், அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு, கூட்டத்தை துருப்புக்கள் சுட்டதாக இஸ்ரேலிய தரப்பு உறுதி செய்துள்ளது.
இது கூட்டக்கொலை என அடையாளப்படுத்தியுள்ள காஸா நிர்வாகம், 104 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 760 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நகரின் மேற்கு நபுல்சி ரவுண்டானாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவுக்காக உதவி லொரிகளை நோக்கி விரைந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு எதிராக அந்த மக்கள் திரண்டுள்ளதாக கருதியதை அடுத்தே, துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை காஸாவின் செயல்படும் சில மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
அதிகார பலத்தை பயன்படுத்தி
இதனிடையே, அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்துவரும் தொடர் தாக்குதல்களுக்கு 30,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை போர் நிறுத்தம் தொடர்பில் ஐ.நா மன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தமது அதிகார பலத்தை பயன்படுத்தி முடக்கியுள்ளது.
இதனிடையே, வியாழன் அன்று நடந்த இரத்தக்களரி சம்பவம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் காரசாரமான கருத்துப் பரிமாற்றத்தை தூண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.