பேட்ட ராப்… பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட சன்னி லியோன்!
நடிகராக இருந்த பிரபுதேவா இயக்குநராகி, இந்தியில் சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், ஷாகித் கபூர் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, தற்போது ‘யு டர்ன்’ அடித்து மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். இயக்கத்தில் ஏற்பட்ட தொய்வால் இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் G.O.AT. படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடிக்கும் படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார். ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
பேட்ட ராப் காதலன் படத்தில் இடம்பெற்ற பாடல். நாயகன், பிரபுதேவாவும், அவரது நண்பர் வடிவேலுவும் நாயகி நக்மாவை சீண்டும்விதமாக, பேட்ட ராப் பாடலை பாடி ஆடுவார்கள். ரஹ்மான் பாடலுக்கு இசையமைத்திருந்தார். அந்தப் பெயரில் ஒரு படத்தை, அதுவும் பிரபுதேவாவை வைத்து எடுக்கையில் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது சரியல்ல. அதனால், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் சன்னி லியோனை ஆட வைத்துள்ளனர்.
இது பற்றி கூறிய அவர், “நான் பிரபுதேவாவின் தீவிர ரசிகை. வேகமான நடன அசைவுகளுக்கு அவர் பெயர் போனவர். அவருடன் பேட்ட ராப் படத்துக்காக ஆடினேன். அவருடன் ஆடும்போது கொஞ்சம் பதற்றமா இருந்தது. பிறகு சமாளித்து ஆடினேன்” என்றார். பேட்ட ராப் படத்தின் ஹைலைட்களில் பிரபுதேவா, சன்னி லியோனின் நடனமும் ஒன்றாக இருக்கும்.