TNPSC குரூப்-2 தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு…. நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர் மாவட்டம் காரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடந்த குரூப்-2 முதன்மைத் தேர்வில் குளறுபடி நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
பிற்பகலில் நடைபெறும் பொது அறிவுத் தேர்வுக்கு வழங்க வேண்டிய வினாத்தாளை காலையிலேயே வழங்கிவிட்டதாகவும், அதனால், குரூப்-2 முதன்மைத் தேர்வில் பிற்பகலில் நடந்த பொது அறிவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
நீதிபதி விஜயகுமார் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாறுபட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட வினாத்தாளை கொடுத்ததாக யாரும் புகார் அளிக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் வினாத்தாள் மாறியதாக கூறுவது யூகம் எனவும், எந்த தேர்வு மையத்திலும் புகார் எழவில்லை எனவும் கூறிய நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இனிவரும் காலங்களில் எவ்வித குழப்பமும் ஏற்படாத வகையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கும் நீதிபதி ஆணையிட்டார்.