பெட்ரோலில் கலப்படம் இருக்குது! கலரை வச்சே கண்டுபிடித்த வாடிக்கையாளர்! வைரலாகும் வீடியோ

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் இருப்பதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் பங்க் நிறுவன ஊழியரிடம் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இது கலப்படமான பெட்ரோல் என வாடிக்கையாளர்கள் புகார் கூறுவதாக தெரிகிறது. இப்படியாக பெட்ரோல் நிறத்தை வைத்து தரத்தை அளவீடு செய்ய முடியுமா? பெட்ரோல் தரத்தை அளவிட்டு செய்வது எப்படி என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தென்காசியில் நகருக்குள்ளே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு அந்த பங்க் பெட்ரோல் தரத்தின் மீது சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக பங்கு ஊழியரிடம் சொல்லி ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு கண்ணாடி குவழையில் பிடித்துள்ளார். அப்பொழுது அந்த பெட்ரோலின் நிறம் பழுப்பு நிறமாக இருந்துள்ளது. இதை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் காட்டி இது கலப்படமான பெட்ரோல் என புகார் கூறியுள்ளார்.
அப்பொழுது பங்க் ஊழியர்கள் பெற்றோர்கள் எல்லாம் தற்போது எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வாடிக்கையாளர் குறிப்பிட்ட பெட்ரோல் கலப்படமான பெட்ரோல் எனவும் அது ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் இருப்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலர் ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் பெட்ரோல் இருந்தால் அது கலப்படமான பெட்ரோல் என கருதி அதை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என நாம் ஆராய்ந்து பார்ப்போம். பெட்ரோலின் நிறத்தை வைத்து அதன் தரத்தை அளவீடு செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. பெட்ரோலின் தரமும் அதன் நிறமும் ஒன்றோடு ஒன்று எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல.