பெட்ரோல்: அரசுக்கும் லாபம், விவசாயிகளுக்கும் லாபம்.. எப்படி..?!
பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.24,300 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார்.2022-23 ஆண்டில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் 509 கோடி லிட்டர் பெட்ரோலை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) சேமித்துள்ளன, மேலும் விவசாயிகளுக்கு 19,300 கோடி ரூபாய் விரைவாக வழங்க வழிவகுத்தது.
இதன் மூலம் நெட் கார்பன் டை ஆக்சைடு 108 லட்சம் மெட்ரிக் டன்களுக்குக் குறைக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சி-ஹெவி மொலாசஸிலிருந்து எத்தனால் தயாரிக்க லிட்டருக்கு ரூ.6.87 ஊக்கத்தொகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஊக்கத்தொகை சி மொலாசஸ் இருந்து எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்றும், எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்திற்கு எத்தனாலின் சப்ளை சீராகக் கிடைக்கும் அளவு மேம்படுத்தும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் நம்புகின்றன.சி-மோலாசஸ் என்பது சர்க்கரை ஆலைகளின் துணை தயாரிப்பாகும், இது எத்தனால் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஏற்கனவே 20 சதவீத கலப்பு எரிபொருளை விற்பனை செய்து வருகிறது, ஆனாலும் இதைப் பகுதி பகுதியாகவே செயல்பாட்டிற்குக் கொண்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.2024-25க்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும், 2029-30க்குள் 30 சதவீத அளவீட்டை அடைவதை அரசாங்கம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய அரசு E20 எரிபொருளை பயன்பாட்டு இலக்கை 2030ல் இருந்து 2025-க்கு முன்கூட்டியே திருத்தி எழுதியுள்ளது.தற்போது இந்தியாவில் 9300 பெட்ரோல் முனையங்களில் E20 எரிபொருள் எனப்படும் 20 சதவீத கலப்பு எரிபொருளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2025ல் நாடு முழுவதும் E20 பெட்ரோல் விற்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி புதன்கிழமை தெரிவித்தார்.