பெட்ரோல் Vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… இரண்டில் சிறந்தது எது..?
இந்திய நுகர்வோருக்கு ஸ்கூட்டர்கள் ஒரு பிரிக்க முடியாத இணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இரு சக்கர வாகனச் சந்தையில் இவை ஒரு மிகப்பெரும் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. இதனுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் வலம்வந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின் இருசக்கர வாகனச் சந்தையில் மின்சார ஸ்கூட்டர்களும் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது.
இந்த சூழலில் சிலருக்கு மின்சார ஸ்கூட்டர்களை வாங்கலாமா? வேண்டாமா? என்ற எண்ணோட்டம் இருந்து வருகிறது. என்னதான் புதிய தொழில்நுட்பம், எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழலுக்கு மாசற்ற வாகனமாக இவை இருந்தாலும், பழைய பெட்ரோல் வாகனத்தைத் தவிர்ப்பதில் இவர்கள் சுணக்கம் காட்டுகின்றனர். எனவே, நாம் ஏன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவது நல்லது? அதனால் எப்படி பயணக் கட்டணத்தை குறைக்க முடியும்? ஏன் இது சரியான நேரமாகப் பார்க்கப்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த தொகுப்பில் விடையைத் தேடலாம்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் vs பெட்ரோல் ஸ்கூட்டர்:
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோரும் இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தினசரி பயண தூரம் 30 கிலோமீட்டராக இருப்பதால், ஒரு மாதத்தில் பயணிக்கக்கூடிய மொத்த தூரம் (30 கிலோமீட்டர் x 30 நாள்கள்) 900 கிலோமீட்டர் ஆகும். ஒரு யூனிட் மின்சாரக் கட்டணம் சராசரியாக ரூ.10 என வைத்துக்கொள்வோம். 30 கிலோமீட்டரைக் கடக்க மின்சார ஸ்கூட்டருக்கு சுமார் ஐந்து யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே (10 x 5 யூனிட்கள்) 50 ரூபாய் செலவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் என்றால், ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் மின்சார நுகர்வு (ரூ.50/100 கிலோமீட்டர்) 50 காசுகளாகும். அப்படியானால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கான மாதாந்திர மின்சாரச் செலவு (0.50 x 900 கிலோமீட்டர்) ரூ.450 ஆகும். ஆண்டுக்கான மின் கட்டணம் (450 x 12 மாதங்கள்) ரூ.5,400 ஆகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பராமரிப்புச் செலவாக சுமார் ரூ.2,000 என்று எடுத்துக் கொண்டால், அதன் உரிமையாளரின் ஆண்டுச் செலவு ரூ.7,400 ஆக இருக்கும்.
இதே பெட்ரோல் ஸ்கூட்டரின் கணக்கீட்டை ஒருமுறை பார்த்துவிடலாம். தினசரி பயண தூரம் 30 கிலோமீட்டர் என வைத்துக் கொள்வோம். பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் சுமார் 50 கிமீ மைலேஜையும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஆகவும் இருப்பதால், இதில் பயணம் செய்பவருக்கு ஆகும் மாதாந்திர பெட்ரோல் செலவு (30 கிலோமீட்டர் x 30 நாள்கள் / 50 கிமீ x 100 /லிட்டர்) ரூ.1800 ஆகும். இதன் விளைவாக பெட்ரோல் ஸ்கூட்டருக்கு ஆகும் ஆண்டு செலவு (1,800 x 12 மாதங்கள்) ரூ.21,600 ஆக இருக்கும். அதனுடன் பராமரிப்புச் செலவுக்கு ரூ.2,000 சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 23,600 ரூபாயை நாம் பெட்ரோல் ஸ்கூட்டருக்காக செலவிட நேரிடுகிறது.
இந்தக் கணக்கீடு என்ன சொல்கிறது :
இதன் பொருள், பெட்ரோலுக்கு மாற்றாக நாம் மின்சார ஸ்கூட்டரைத் தேர்வு செய்தால், ஒரு வருடத்தில் ரூ.16,200 பணத்தை சேமிக்க முடியும் என்பது தெளிவாகிறது. என்னதான் பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் மின்சார ஸ்கூட்டர்கள் தங்களின் ஆயுட்காலத்தில் குறைந்த செலவைத் தந்து அதிக சேமிப்பை நுகர்வோருக்கு வழங்கினாலும், அதன் விலை அம்சங்கள் வாங்கும் திறனைக் குறைப்பதாக இருக்கின்றன. வெளிநாட்டு சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை அதிகம் என்பதால், இந்தியாவில் மின்சார வாகனங்கள் விலை அதிகமாக உள்ளன.
ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஏதர் 450எக்ஸ் (3.7 kWh) ஆகியவை இந்தியா முழுவதும் சாலைகளை அலங்கரிக்கும் பிரபலமான இரண்டு மின்சார ஸ்கூட்டர்களாகும். இதில் ஓலா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,29,999 ஆகவும், ஏதர் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,28,671 ஆகவும் இருக்கின்றன. மறுபுறம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டர்களான ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.76,234, அதே சமயம் ஆக்டிவா 125 விலை ரூ.79,806 ஆகவும், டிவிஎஸ் ஜூபீட்டர் விலை ரூ.73,340 ஆகவும் எக்ஸ்-ஷோரும் விலைகளில் கிடைக்கின்றன. இதில் இருந்து மின்சார ஸ்கூட்டர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிக விலை கொண்டதாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
FAME 2 மானியம் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் எலெக்ட்ரிக் பாலிசி ஊக்கத்தொகைகள் இருந்தாலும், மின்சார ஸ்கூட்டர்கள் அவற்றின் போட்டியாளரான பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிக விலையில் இருப்பது மறுக்க முடியாதது தான். ஆனால், நாம் ஒட்டுமொத்தச் செலவைக் கருத்தில் கொள்ள வேண்டும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காகும் செலவை, அதன் வாயிலாகவே நாம் விரைவில் சமன் செய்துவிட முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.