டாடா நிறுவன கார்களை வாங்க திட்டமா? இந்த தேதி முதல் விலை உயர போகிறது!

சமீப காலமாக நாட்டில் பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.

ஆனால் மூல பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளன. புதிய விலை உயர்வு குறித்து கடந்த ஆண்டு இறுதியிலேயே அறிக்கைகள் மூலம் தகவல் தெரிவித்த நிறுவனங்கள் பலவும் முன்பு கூறியதை போலவே தங்கள் கார்களின் விலையை உயர்த்தி உள்ளன.

புதிய ஆண்டில் அடுத்தடுத்து தங்கள் வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அடக்கம். இந்த நிறுவனம் தனது அனைத்து பயணிகள் வாகனங்களிலும் சுமார் 0.7% விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது வரும் பிப்ரவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளை (input costs) ஓரளவு ஈடுகட்ட, நாட்டில் விற்கப்பட்டு வரும் அனைத்து டாடா கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது. எனினும் இந்த அறிவிப்பிற்கு பிறகு நிறுவனம் தனது கார்களின் திருத்தப்பட்ட புதிய விலை என்ன என்பதை வெளியிடவில்லை. முன்னதாக உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதாக கூறி நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியும் அதன் பயணிகள் வாகனங்களின் விலையை சுமார் 0.45 சதவீதம் வரை அண்மையில் உயர்த்தியது.

இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ICE-ல் இயங்கும் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சமீபத்திய இந்த விலை உயர்வு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் தான் நிறுவனம் Tata Punch EV-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கார் டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் SUV ஆகும். அதே நேரம் Nexon EV, Tigor EV மற்றும் Tiago EV-க்களுக்கு பிறகு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி தவிர நாட்டில் உள்ள பல கார் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் தங்கள் கார்களின் விலை உயர்வு பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளனர். உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, பணவீக்கம், மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை காரணமாக காட்டி நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரித்து வருகின்றன. விலைகள் உயர்த்தப்பட்டாலும் கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து சூடுபிடிக்கும் என்று நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *