`கருவை பாதிக்கும் பிளாஸ்டிக்’: ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் – ஆய்வு!

பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அழியாமல் தங்கிவிடுகிறது.
பிளாஸ்டிக்கினால் வன உயிரினங்கள் முதல் நீர் வாழ் உயிரினங்கள் வரை பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த நிலையில் கண்டுபிடிக்கமுடியாத சிறிய பிளாஸ்டிக் துகள்கள் நீரில் கலந்து மனிதனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இவற்றை நானோபிளாஸ்டிக்ஸ் என அழைக்கின்றனர்.
ஒரு மைக்ரோமீட்டருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் அல்லது மனித முடியின் எழுபதில் ஒரு பங்கு அகலம் உள்ள பிளாஸ்டிக் துகள்களை நானோபிளாஸ்டிக்ஸ் என அழைக்கின்றனர்.
நீண்டகாலமாகவே பாட்டில் தண்ணீரில் நானோபிளாஸ்டிக்கின் இருப்பை விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர். இருந்தாலும் தனி நானோ துகள்களைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் இன்னும் இல்லை. இந்தச் சவாலைச் சமாளிக்க ஆய்வின் இணை ஆசிரியர்கள் ஒரு புதிய மைக்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவின் பிரபலமான மூன்று பிராண்டுகளில் இருந்து சுமார் 25 ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை வாங்கினர். வாங்கிய பாட்டில் தண்ணீரை ஆய்வு செய்கையில், ஒவ்வொரு லிட்டரிலும் 1,10,000 முதல் 3,70,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவற்றில் 90% நானோ பிளாஸ்டிக்குகள்.
`ஒரு லிட்டர் (33 அவுன்ஸ்) பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன’ என்று ஆய்வில் தெரிந்தது. எந்தெந்த பிராண்டுகளை ஆய்வு செய்தனர் என்பதைத் தெரிவிக்க ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவிட்டனர்.