அட்டாக்கிங் கிரிக்கெட்டா ஆடுறீங்க.. போய் ரஞ்சி டிராபி விளையாடுங்க.. ஸ்ரேயாஸை அனுப்பி வைத்த பிசிசிஐ!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணியின் தேர்வு குழு தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயரை ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த போட்டியில் 49 பந்துகளில் 49 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இந்த போட்டிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட் என்பதால் எனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அட்டாக்கிங் கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறேன். அதுதான் எனது அணுகுமுறை என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்துவீச்சாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகமாக திணறினார். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஷார்ட் பால் பிரச்சனையை ஸ்ரேயாஸ் ஐயர் சரி செய்யவில்லை என்பது அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. இதன் காரணமாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்த்தமாக 104 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். நல்ல தொடக்கம் கிடைத்தும் தேவையில்லாமல் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆட முடிவு செய்து சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் விக்கெட்டை விடுவதை தொடர்ந்து செய்து வந்தார். இதன் காரணமாக அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. காயம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால், அவர் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் ரஞ்சி போட்டியில் விளையாட களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.