”தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்”: அமித் ஷா
தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தால் பயன் அடைந்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது அவர், தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அது மிகப் பெரிய கனவு. விண்வெளி மற்றும் ராணுவமும் அதில் அடக்கம். வர்த்தகத்தையும், தொழில்துறையையும், 140 கோடி மக்களையும் தற்சார்பு அடையச் செய்ய வேண்டும் என்பதற்கான கனவு அது.
விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அதேநேரத்தில், ஏழைகளின் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.அவரது தொலைநோக்கு யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலமாக நாட்டில் 60 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வந்தபோது அது குறித்த கவலை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், அந்த கவலையில் இருந்து நம்மை பிரதமர் மோடி விடுவித்தார். கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
உள்நாட்டு தயாரிப்பு அது. அதனை மிகச் சரியாக விநியோகம் செய்து எல்லோருக்கும் கரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழும் எளிதாகக் கிடைக்கும் படி செய்தவர் அவர். கரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசாமாகப் போடப்பட்டது என தெரிவித்தார்.