இன்று 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்குகிறார்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார், மற்றும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து “நமோ ட்ரோன் திதி யோசனா” திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். அதில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக சுமார் 446 ட்ரோன்கள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாது சுமார் 500 நபர்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது என்றார். மேலும், தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்த அவர், தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாது,முற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.
இந்த வாய்ப்பின் மூலம் பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, நமோ ட்ரோன் திதி யோஜனா போன்ற முன்முயற்சிகள் மூலம், கிராமப்புற சமூகங்களில் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதில் கருடா ஏரோஸ்பேஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்..