PM Modi On Budget 2024: “4 பேருக்கு முக்கியத்துவம், இடைக்கால பட்ஜெட் புதுமையானது” – பிரதமர் மோடி பெருமிதம்
2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், ‘இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் புதுமையானது.
இது தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. எதிர்கால பாரதத்திற்கான 4 தூண்களான இளைஞர்கள், மகளிர், ஏழை எளியோர் மற்றும் விவசாயிகளுக்கானது. இந்த பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது’ என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை பிரதிபலிக்கும் பட்ஜெட்:
தொடர்ந்து, ‘இந்த பட்ஜெட் இளம் இந்தியாவின் இளம் வயதினரை பிரதிபலிக்கிறது. பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், மூலதனச் செலவீனமானது, வரலாறு காணாத அளவுக்கு ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்களின் மொழிகளில் பேசினால், இது ‘ஸ்வீட் ஸ்பாட்’. இதன் மூலம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் தயாராகும்.