அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி.. எல்ஐசி ஊழியர்களுக்கு 16% சம்பள உயர்வு..!!
பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன் மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே ஊதிய உயர்வு குறித்து முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, வங்கி ஊழியர்களுக்கு வருடாந்திர அடிப்படையில் 17 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எல்ஐசி நிறுவன ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (LIC) ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 16 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இது ஆகஸ்ட் 2022 முதல் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான சம்பளத்தையும் (Arrears) எல்ஐசி ஊழியர்கள் பெற உள்ளனர். இதனுடன், அகவிலைப்படி போன்ற சலுகைகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, மொத்த சம்பள உயர்வு 22 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
இந்த அறிவிப்பு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்களுக்கும், 30,000 ஓய்வூதியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பள உயர்வு LIC-யின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தவும் உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள சம்பள உயர்வின் வாயிலாக மட்டுமே எல்ஐசி நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான செலவுகளை ஏற்படுத்தும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த சம்பள செலவு ரூ.29,000 கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் LIC-யின் வரிக்கு பிந்தைய லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 49 சதவீதம் அதிகரித்து ரூ.9,444.4 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.6,334.2 கோடியாக இருந்தது.
முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிப்பு மற்றும் விற்பனை பிரீமியம் வருமானம் (Net Premium Income) உயர்வு ஆகியவையே இந்த லாப உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
இந்த காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC-யின் பிரீமியம் வருமானம் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் LIC-யின் முதலீடுகளில் இருந்து கிடைத்த வருமானம் கடந்த ஆண்டின் அதே காலாண்டில் ரூ.84,869 கோடியாக இருந்ததுடன் ஒப்பிடும் போது 12 சதவீதம் அதிகரித்து ரூ.95,266.8 கோடியாக உள்ளது.
அதே நேரத்தில், எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாக செலவுகள் கடந்த ஆண்டின் அதே காலாண்டில் ரூ.18,193.8 கோடியாக இருந்ததுடன் ஒப்பிடும் போது 32 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்ஐசி பங்குகள் வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 3.54 சதவீதம் சரிந்து ரூ.924.85 என்ற விலையில் முடிவடைந்தன.