சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் துறையினர் உத்தரவு..!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் காவல்துறையினர் தரப்பில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பயன்படுத்துபவர்கள், தேர்தல் முடியும் வரை அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை வைத்திருக்கும் தனி நபர்கள், அந்தந்த பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்காக கொண்டு செல்லப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் நடத்துபவர்கள் மற்றும் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்கள் காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று துப்பாக்கிகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *