நடப்பு வணிக ஆண்டில் செப்.30 வரை பாலிசி முதிர்வு தொகை ரூ.6,496 கோடி வழங்கல்: எல்ஐசி தென் மண்டல மேலாளர் தகவல்
சென்னை: நடப்பு வணிக ஆண்டு 2023-24-ல் செப்.30-ம் தேதி வரை பாலிசி முதிர்வு தொகையாக ரூ.6,496 கோடி வழங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
எல்ஐசி தென்மண்டல அலுவலகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக போட்டிகளை எதிர்கொண்டு, 24-க்கும் அதிகமான போட்டி நிறுவனங்கள் இருந்தபோதிலும், எல்ஐசி நிறுவனம் ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன்னணியில் உள்ளது. எல்ஐசி இந்த வணிக ஆண்டில் இதுவரை தன்விருத்தி, ஜீவன் கிரண், ஜீவன் உத்சவ் மற்றும் ஜீவன் தாரா-2 என்ற 4 பாலிசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அக்.31-ம் தேதி வரை சிறப்பு புதுப்பித்தல் முகாமில், எல்ஐசி தென்மண்டலம் காலாவதியான பாலிசிகளை அதிகபட்சமாக புதுப்பித்து, இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த புதுப்பித்தல் முகாம் வரும் பிப்.29 வரை நடைபெறுகிறது.
எனவே, இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமாக பாலிசிகளை புதுப்பிக்க ஊழியர்கள் மற்றும் முகவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நடப்பு வணிக ஆண்டு 2023-24-ல் செப்.30-ம் தேதி வரை தென்மண்டலம் ரூ.6,496 கோடி முதிர்வு தொகையும், ரூ.664 கோடி இறப்பு உரிமத் தொகையும் வழங்கி உள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு, பிரீமியம் செலுத்தப்படாத பாலிசிகளுக்கு தாமதக் கட்டணத்தில் சலுகைகளை அறிவித்தது.