அரசியல்வாதி பையன் நல்லவன்.. மிரட்டலில் ஈடுபட்டார் விஹாரி.. ஷாக் கொடுத்த ஆந்திர கிரிக்கெட் சங்கம்!
விசாகப்பட்டினம் : கேப்டன்சி விவகாரத்தில் நட்சத்திர வீரர் ஹனுமா விஹாரி ஆந்திரா பிரதேச அணி வீரர்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக அம்மாநில கிரிக்கெட் அசோசியேஷன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், தற்போது இந்திய அணிக்காக ஆடிய ஹனுமா விஹாரி ஆந்திரா அணி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இந்த ரஞ்சி டிராபி தொடரின் ஆந்திரா அணியின் கேப்டன்சி பதவி பறிப்பில் அரசியல் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஹனுமா விஹாரி தனது பதிவில், பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திரா அணியின் 17வது வீரரை பார்த்து கத்தினேன். அந்த வீரர் ஒரு அரசியல்வாதியின் மகன். அந்த போட்டியில் 410 ரன்களை சேஸிங் செய்த போதும், என்னை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஆந்திரா அணியை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றி கொண்டு வந்துள்ளேன். ஆனாலும் என்னை விட அரசியல்வாதியே முக்கியம் என்று ஆந்திரா அணி நிர்வாகம் என்னை நீக்கியுள்ளது.
இனி என் வாழ்நாளில் ஆந்திரா அணிக்காக விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து ஆந்திரா அணியின் பிருத்வி ராஜ் என்ற வீரர் நக்கலாக விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து ஹனுமா விஹாரி, கேப்டனாக தொடர வேண்டும் என்று ஆந்திரா அணியின் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் பொதுவெளியில் வெளியிட்டார். இந்த நிலையில் ஹனுமா விஹாரியின் குற்றச்சாட்டு குறித்து ஆந்திரா பிரதேச கிரிக்கெட் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், சில வீரர்கள் ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக புகாரளித்துள்ளார்கள். இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி பிசிசிஐக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். ஹனுமா விஹாரி குற்றம்சாட்டியுள்ள பிருத்வி ராஜ் என்ற வீரர் ரஞ்சி டிராபி போட்டிகளில் ஒருமுறை கூட விளையாடியவில்லை. அவர் குறித்து விஹாரி கூறியுள்ள அனைத்து புகார்களும் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.