சிறைத்தண்டனையால் பதவி பறிபோன அரசியல்வாதிகள்!
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வருகிறார். அவரும் பொறுப்பு இல்லாத அமைச்சராக இதுவரை நீடித்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து பொன்முடி வகித்துவந்த உயர்கல்வி அமைச்சர் பதவியானது அமைச்சர் கண்ணப்பனுக்குக் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை நீதிமன்ற தண்டனையால் அமைச்சர் பதவியை இழந்தவர்கள் யார்? யார் என்பதைப் பற்றி ஒரு பட்டியலைத் தயாரித்தோம்.
லட்சத் தீவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆக இருந்து வந்த முகம்மது ஃபைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆகவே அவரது எம்.பி. பதவியானது பறிபோனது.
அதைப்போல அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும் நீதிமன்றத் தீர்ப்பால் பதவியை இழந்த அரசியல்வாதிகள் பட்டியல் ஏற்கெனவே இருந்து வருகிறார்.
இவர் 1998இல் ஓசூரில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றபோது கலவரம் மூண்டது. அந்தக் கலவரத்தில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. அதன் காரணமாக பாலகிருஷ்ணா ரெட்டி உட்பட 108பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம் கானுக்கு 2019 ஆம் ஆண்டு வெறுப்பு பிரச்சார வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, அக்டோபர் 2022 இல் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆர்ஜேடி கட்சியின் சார்பில் எம்எல்ஏ ஆக இருந்த அனில் குமார் சாஹ்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதை அடுத்து, அவர் அக்டோபர் 2022 இல் பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
2019ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆகவே அவர் வகித்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத்க்கு எதிராகத் திரிபுரா மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2013 ஆம் ஆண்டு பெற்றார்.
ஆகவே அவர் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கில் கால்நடைத் தீவன வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு அவருக்குச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதனால் அவர் வகுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவரது தகுதி நீக்கம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை எழுப்பியது.
வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலும் பலர் சிறைத்தண்டனையால் பதவியை இழந்துள்ளனர். அதில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி.
இவர் 1997ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டில் கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு நீண்டகாலம் நடந்துவந்தது.
அதன் தொடர்ச்சியாக 2014ஆம் ஆண்டு அவருக்குச் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். அவர் அப்போது மாநிலங்களைவை உறுப்பினராக இருந்து வந்தார். அந்தப் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த மாதிரி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அவருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
அதன்படி அவர் 2001 ஆம் ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்றார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த நிலையில், அப்பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இப்போது அதே பட்டியலில் திமுகவைச் சேர்ந்த பொன்முடி புதியதாக இணைந்துள்ளார். இவரும் ஜெயலலிதாவைப் போல வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அவர் மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் அளித்தது. ஆகவே, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். கூடவே அவர் வகித்துவந்த உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை இழந்துள்ளார்.