Pondicherry T10 League 2024: இன்று முதல் பாண்டிச்சேரி டி10 லீக்.. பட்டையகிளப்ப காத்திருக்கும் 6 அணிகள்..!
மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டியின் முதல் போட்டி (ஜனவரி 28) ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது. இந்த 31 போட்டிகளும் புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் சங்கம் புதுச்சேரி மைதானம் 3-ல் நடைபெறுகிறது. ஆறு அணிகளும் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதும். லீக் சுற்றின் அடிப்படையில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் வருகின்ற பிப்ரவரி 7 (புதன்கிழமை) மோதுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகள்:
பாண்டிச்சேரி வடக்கு XI , பாண்டிச்சேரி தெற்கு XI , பாண்டிச்சேரி மேற்கு XI , காரைக்கால் XI , மாஹே XI மற்றும் யானம் XI .
இந்த ஆண்டு இந்த ஆறு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இது இரண்டாவது முறையாகும். பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த ஜனவரி 2 முதல் ஜனவரி 18 வரை நடந்த சீசெம் மாவட்டங்களுக்கு இடையேயான டி20 போட்டிகளில் இந்த 6 அணிகளும் மோதியது குறிப்பிடத்தக்கது.
சீசெம் மாவட்டங்களுக்கு இடையேயான டி20 இறுதிப் போட்டிகளில் காரைக்கால் லெவன் அணியும் பாண்டிச்சேரி மேற்கு லெவன் அணியும் மோதின. இதில், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 19 ஓவர்களில் மேற்கு லெவன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாண்டிச்சேரி மேற்கு லெவன் அணியின் அமீர் ஜீஷான் 47 பந்துகளில் 76 ரன்களை அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.