சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்.. 17,000 போலீசார் குவிப்பு!
தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் நான்காவது மற்றும் கடைசி நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காணும் பொங்கல் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கலையொட்டி கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க சென்னை முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக் கூடிய 3 வாகனங்கள் மூலமாக ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் தலா 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்றிரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் கடற்கரைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்காக 3 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல், வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.