வந்தாச்சு பொங்கல்… பனங்கிழங்கு எடு கொண்டாடு – கொட்டிக்கிடக்கும் சத்துக்கள் என்னென்ன?
Pongal 2024: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. மார்கழி கடைசி நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தை முதல் நாளான நாளை சூரிய பொங்கல் அதாவது தை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் பண்பாடு போற்றும் இந்த பண்டிகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பொங்கலுக்கு பானையில் பொங்கல் வைத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை படையலிட்டு சூரிய பகவானை நோக்கிய வழிபாடும் நடைபெறும்.
பொங்கலும் பனங்கிழங்கும்
அந்த வகையில், பொங்கல் என்றால் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள்தான் நினைவுக்கு வரும். அதேபோல், பல பேருக்கு பொங்கல் என்றாலே பனங்கிழங்கும், அதன் ருசியும் சட்டென அவர்களின் மூளைக்கு எதிரொலிக்கும் எனலாம்.
பொங்கல் படையலை சாப்பிட்ட பின்னர், உறவினர்கள் நண்பர்களுடன் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது ஒருபுறம் என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பனங்கிழங்கை அவித்து, அதனை வீட்டில் உள்ள இளையோருக்கு உணவுக்கு பின் கொடுப்பதும் வாடிக்கைதான். பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்களோ அவர்களுக்கு பனங்கிழங்கை சாப்பிடக் கொடுத்து வரவேற்கும் பழக்கமும் அதிகம் உள்ளது.
பனங்கிழங்கை எப்படி சாப்பிடலாம்?
பனங்கிழங்கின் வெளிப்புற தோலை முதலில் உரித்து எடுக்க வேண்டும். அதில் நல்ல கனமான பகுதியுடன் உள்ளே இருக்கும் வேர் போன்ற மெல்லிசான பகுதியை நீக்க வேண்டும். பின்னர், ஒரு விரல் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதை நன்றாக நீரில் கழுவி, அதனை அவித்து சாப்பிட வேண்டும். அதனை குக்கரில் வைத்து 6 – 10 விசில் வைத்து இறக்கவும். அதில் சிறிது அளவு மஞ்சள் தூளையும், உப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.