Pongal Parisu 2024: ’1000 ரூபாய் பத்தாது! 3000 ரூபாய் வேண்டும்!’ பொங்கல் பரிசு கேட்கும் ஓபிஎஸ்!

பெருவெள்ளத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் பெய்த பெருவெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் அனைவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதே சமயத்தில், ரொக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். பொங்கல் தொகுப்பாக சென்ற ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில், பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் தொகுப்பினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *