பொன்முடி சட்டப்படி எதிர்கொள்வார்.. பாஜகவுக்கு ஊழல் பற்றி பேச அருகதையே இல்லை.. திருமாவளவன் அட்டாக்!
தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திருமாவளவன் பேசுகையில், “பெரியாரின் அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பெரியார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரியவர் அல்ல, ஒட்டுமொத்த விளிம்புநிலை மக்களுக்குமானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தங்களது காழ்ப்புணர்ச்சியை கக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெரியாரின் அரசியலை வீழ்த்துகிற முயற்சியை எதிர்த்து அவரது சிந்தனையாளர்களும், அம்பேத்கரின் சிந்தனையாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு இருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண ஒருங்கிணைந்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து எதேசதிகார போக்கை கடைபிடிக்கிறது. அவர்கள் எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசியலமைப்பு சட்டத்தையே மதிப்பதில்லை. அவர்கள் விருப்பம் போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கடைசி கூட்டத் தொடரில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகிய அமர்வில் முக்கிய மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உரிய பாடம் கற்பிப்பார்கள். வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மின்னணு வாக்குப்பதிவு முறை கூடாது, வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியா கூட்டணியில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த கருத்துக்கு பேராதரவு தர வேண்டும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை சட்டப்படி எதிர்கொள்வதற்கு திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடியும் மேல் முறையீட்டிற்கு ஆயத்தமாகி இருக்கிறார். சட்டப்படி உரிய தீர்வை அவர்கள் பெறுவார்கள்.
பாஜகவை சார்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சி.ஏ.ஜி அறிக்கையின்படி இதுவரையில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிக மோசமான முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் ஆட்சியாக இந்த பாஜக ஆட்சி விளங்குகிறது. ஆகவே பாஜகவை சார்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.