Ponmudy: பொன்முடியை வீட்டுக்கே என்று சந்தித்த மு.க.அழகிரி! அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்பு துறை முடக்கிறது.
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 2006 ஏப்ரல் 13 முதல் 2011 மே 14 வரையிலான காலமாக மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016 ஏப்ரலில் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017ல் மேல் முறையீடு செய்தது. மேலும் அதில் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டதுடன், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை 1 மாத காலம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று பொன்முடி சந்தித்துவிட்டு வந்த நிலையில், இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.
அரசியலில் இருந்து மு.க.அழகிரி விலகி உள்ள நிலையில் பொன்முடியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.