பாண்டிங், கங்குலிக்கே விபூதி அடித்த சுட்டிக் குழந்தை.. டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெகா சொதப்பல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனின் தரமான பேட்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வி அடைந்தது. டெல்லி அணியை வழிநடத்தி வரும் ஜாம்பவான்களான அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆலோசகர் சவுரவ் கங்குலி போட்ட திட்டத்தில் ஏற்பட்ட தடங்கலை சரியாக பயன்படுத்திய சாம் கர்ரன் மற்றும் லியாம் லிவிங்க்ஸ்டன் போட்டியை பஞ்சாப் அணி வசம் எடுத்துச் சென்றனர்.
இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது விக்கெட் வீழ்ச்சியால் 17.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்தது அந்த அணி. அதனால் வேறு வழியின்றி இம்பாக்ட் வீரரை களமிறக்கி பேட்டிங்கை மேலே தூக்கி நிறுத்த முடிவு செய்த ரிக்கி பண்டிங் அபிஷேக் போரல் என்ற அதிரடி பேட்ஸ்மேனை இறக்கினார். அபிஷேக் போரல் 10 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் இனி 160 ரன்களை தாண்டுவதே பெரிது என நினைத்த நிலையில் 174 ரன்கள் குவித்தது. எப்படியும் அந்த அணி வெற்றி பெறும் என கருதிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் “சுட்டிக் குழந்தை” என தமிழக ரசிகர்களால் அழைக்கப்படும் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் விக்கெட் இழக்காமல் நின்று நிதானமாக ரன் சேர்த்தார்.
அதே சமயம், டெல்லி அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கணுக்காலில் காயம் ஏற்பட்டு விலகினார். ஒருவேளை அபிஷேக் போரல் இம்பாக்ட் வீரராக களமிறங்கி இருக்கா விட்டால் கூடுதல் பந்துவீச்சாளரை டெல்லி அணி தேர்வு செய்து இருக்கும். ஆனால், பேட்டிங்கில் நடந்த சறுக்கலை சமாளிக்க போரல் அழைக்கப்பட்டார். அதனால், இஷாந்த் சர்மா காயத்தால் வெளியேறிய போது டெல்லி அணி ஒரு பந்துவீச்சாளர் குறைவாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இஷாந்த் சர்மா இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அவரது கூடுதல் இரண்டு ஓவர்களை சுமித் குமார் வீசினார். ஆனால், அவரது பந்துவீச்சில் எளிதாக ரன் குவித்த சாம் கர்ரன் மற்றும் லியாம் லிவிங்க்ஸ்டன் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தனர். ரிக்கி பாண்டிங், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் டெல்லி அணி திட்டமிடலில் சொதப்பி தோல்வி அடைந்தது.