Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் ஏபிபி நாடு தளத்தில் தொடராகவெளியிடப்பட்டு வருகிறோம்.
7வது தொடராக பிரதமர்களை தேர்வு செய்து கிங் மேக்கராக இருந்த காமராஜர் குறித்து காண்போம்.
இளமையில் சுதந்திர போராட்டம்:
காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவரது தந்தை குமாரசாமி தாயார் சிவகாமி அம்மாள் ஆவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. சிறு வயதிலே சுதந்திர போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட காமராசர், தனது 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றமைக்காக சிறை சென்றார்.
காமாராஜர், அரசியலில் சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்டு பயணத்தை தொடங்கினார். அப்போது, 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் தொகுதியில், நீதிக்கட்சி சார்பில் செல்வாக்கு மிகுந்த ராமசாமி நாடார் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காமராஜர் களமிறக்கப்பட்டார். காமராஜருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். அத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைத்தது.