பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடகராக அறிமுகமான முதல் படம்: ஜாதகம்
கல்யாணமான மூன்றே மாதத்துக்குள் மணப்பெண் இறந்துவிடுவாள் என்று சிலர் கதை கட்டி விடுகிறார்கள். இந்த வதந்தி மூலம் ஓர் இளம் பெண் வாழ்க்கைக்கு உலை வைக்கிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களும் உண்மை வெளியான பின் நடக்கும் மகிழ்ச்சியும்தான் கதை. சீரியஸான கதைதான். ஆனால், நகைச்சுவையாகச் சொல்லியிருந்தார்கள். படத்தின் போஸ்டரில், ‘ஹாஸ்ய சமூகச் சித்திரம்’ என்றே விளம்பரம் செய்தார்கள்.
டி.கே.பாலசந்திரன், ஆர்.நாகேந்திரராவ், பி.டி.சம்மந்தம், கே.ஆர்.செல்லம், கே.என்.கமலம், கமலா பாய் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆர்.கோவர்த்தனம் இசை அமைத்தார். அப்போது பிரபலமாக இருந்த இசை அமைப்பாளர் சுதர்சனத்தின் சகோதரரான இவர், இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அவரின் இசையும் பாடல்களும் இந்தப் படத்தின் பெரும் பலம்.கே.சுந்தர வாத்தியார் பாடல்களை எழுதினார். இப்போது கேட்டாலும் பாடல்களின் இசையும் வார்த்தைகளும் இனிமையாக இருக்கின்றன.
எம்.எஸ்.ராஜேஸ்வரி குரலில், ‘குலவும் யாழிசையே கண்ணன் குழலிசை ஆவாயோ’, ‘மனதில் புதுவித இன்பம் காணுதே’, ‘மாடுகள் மேய்த்திடும் பையன்…’, எம்.எல்.வசந்தகுமாரி பாடிய, ‘வேலன் வருவாரோடி’, பி.பி. னிவாஸ் குரலில், ‘சிந்தனை என் செல்வமே’, ‘மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா’ ஆகிய பாடல்கள் பெரிய ஹிட்.
‘மனதில் புதுவித இன்பம் காணுதே’ பாடல், இலங்கை வானொலியில் அப்போது அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் ஒன்று. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய, ‘சிந்தனை என் செல்வமே’தான், தமிழில் அவர் பாடிய முதல் பாடல். அவரின், ‘மூட நம்பிக்கையாலே – பல கேடு விளையும் மனிதா – கிடை ஆடுமாடுபோலே அறியாமல் வாழலாமா…’ – அப்போதே எழுதப்பட்ட பகுத்தறிவு பாடல். இதுவும் தனிவரவேற்பைப் பெற்றது. 1953-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.