மாற்றுத் திறனாளி பிரணவ் நாயர்.. கூகுளில் லட்சக்கணக்கான சம்பளத்துடன் கிடைத்த வேலை! எப்படி சாதித்தார்?

மனதை உறுதியாக வைத்துக் கொண்டால் போதும் விடாமுயற்சியுடனும் அயராத அர்ப்பணிப்புடனும் செயல்பட்டால் எப்பேர்ப்பட்ட முட்டுக்கட்டைகளையும் தவிடுபொடியாக்கி விட்டு வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுவிடலாம் என்பது நமது மூத்தோர் நிரூபித்த ஒரு வழிமுறையாகும்.

இதை பிரணவ் நாயர் என்ற 22 வயதான இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார். பிறந்ததில் இருந்தே செரிபரல் பால்ஸி என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிரணவ் நாயர் குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் மடியிலும், வளரவளர ஒரு வீல்ச்சேரிலும் அமர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்தச் சிரமத்திலும் பள்ளிப்படிப்பை சிறப்பாக முடித்து குவாஹாட்டி ஐஐடியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். கேம்பஸ் இன்டர்வியூவில் அவருக்கு கூகுளில் வேலை கிடைத்தது. மனந்தளராமல் போராடி படித்து வந்த பிரணவ் நாயருக்கு கிடைத்த வெற்றிக் கனியாகும் இது.

உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் பிரணவ்வுக்கு அது வாய்த்தது. காரணம், அவரது உழைப்புடன் பெற்றோரின் ஆதரவு, ஐஐடி பேராசிரியர்களின் உறுதுணையுமே. குழந்தையாக இருக்கும்போதே அவரது சிரமங்கள் இரண்டு வகைப்பட்டு இருந்தன. முதலாவதாக படிப்பு. வழக்கமான பள்ளியில் தான் அவர் படித்து வரவேண்டும் என்பதில் சந்தேகம் பிரணவ்வின் பெற்றோர் உறுதியாக இருந்தனர். ஆனால் இதை பல பள்ளிகள் ஏற்காமல் அட்மிஷன் தரவில்லை. பிரணவ்வுக்காக வகுப்பறையை தரைதளத்துக்கு கொண்டு செல்லவேண்டியிருக்கும், எஸ்கலேட்டர்கள் அமைக்க வேண்டியிருக்கும் அல்லது கூடுதலாக சிறப்பு வசதிகளை செய்து தரவேண்ட்யிருக்கும் என்று பல்வேறு சாக்குகளைச் சொல்லி பிரணவ்வை ஏற்க மறுத்துவிட்டன. இப்படி அவரது கல்வியின் ஆரம்பமே பல சிரமங்களை சந்தித்தது.

இதுதவிர வீல்சேரில் அமர்ந்து கொண்டு பயணிப்பது அவருக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. பயணம் செய்யும் போது எப்போதும் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையில் பிரணவ் இருந்தார். தனிப்பட்ட போக்குவரத்து வசதியை செய்ய வேண்டியிருந்ததால் அவரது படிப்புக்கு இது ஒரு கூடுதல் சுமையாக இருந்தது.

இதற்கெல்லாம் மேலாக பிரணவ்வுக்கு தனிப்பட்ட முறையில் பல பிரச்னைகள் இருந்தன. நண்பர்களை உருவாக்குதல், அவர்களுக்கு மாற்றுத்திறனாளி நண்பர்கள் பற்றிய மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் என்பது இதில் அடங்கும்.

ஒரு குழந்தையாக அவரால் அந்த வயதுக்கே ஏற்ற பொழுதுபோக்குகளான சுற்றுலா, டிரெக்கிங், விளையாட்டு மற்றும் பிற வேடிக்கையான விஷயங்களில் கலந்து கொள்ள முடியாத சோகத்தை பிரணவ் அனுபவித்தார். ஆனால் அவர் தனது மனதை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். பேச்சுக்கலையில் திறனை வளர்த்துக் கொண்டு பப்ளிக் ஸ்பீக்கிங்கில் பிய்த்து உதறினார். அதன் மூலம் மகிழ்ச்சியுடன் மன ஆறுதலைப் பெற்றார்.

தனது வெற்றியை பிரணவ் தனது பெற்றோருக்குப் புகழாரம் சூட்டினார். “சாதாரண விதிகளுக்கு அப்பால் நான் கனவு காணக்கூடிய ஒரு தளத்தை எனது பெற்றோர் எனக்கு வழங்கினர். என் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர்களால் மில்லியன் கணக்கான சிறிய இடையூறுகளை புரிந்து கொண்டு அவற்றை எளிதாகவும் சாத்தியமாக்கவும் எனக்கு உதவினர். உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக உணர்வு ரீதியாகவும் அவர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் பிரணவ்.

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் பள்ளிப் படிப்பை பிரணவ் முடித்தார். அவருக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அவரது பெற்றோர் அவரது உடலியல் பிரச்னையை மீறி சாதிக்கக்கூடிய வேறு ஏதாவது ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்குமாறு ஊக்குவித்தனர். அடுத்ததாக எனக்கு கணினி மீதான ஆர்வத்தினால், நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக மாற முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக, நான் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் (பிடபிள்யூடி) பிரிவில் 27 வது இடத்தைப் பெற முடிந்தது.

ஐஐடி குவாஹாட்டியில் நான் அதிக சவால்களை எதிர்கொள்ளவில்லை. பள்ளியில் நான் எதிர்கொண்ட எந்த சிரமங்களும் இங்கு இல்லை. எனக்கு ஐஐடி கல்வி நிறுவனம் ஒரு படிக்கல்லாக இருந்தது. அதிக லட்சியமுள்ள மாணவர்களால் சூழப்பட்டிருப்பது, ஒவ்வொருவரும் தாக்கம் மற்றும் வித்தியாசமான ஒன்றைச் செய்வதன் மூலம், மேலும் கற்றுக்கொள்ள என்னைத் தூண்டியது என்று தெரிவித்தார் பிரணவ்

ஐஐடியில் உள்ள அவரது சீனியர்கள் கேம்பஸ் இன்டர்வியூவின்போது கூகுளில் இரண்டு இன்டர்ன்ஷிப்பைப் பெற அவருக்கு உதவினார்கள். இரண்டு பணிகளிலும் அவர் காட்டிய திறமையின் அடிப்படையில் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து அவருக்கு முன் வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டது. அவர் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஜூலை மாதம் சேர உள்ளார்.

“எனது வேலையின் போது எனது உடல் குறைபாடுகள் என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும், வேலை-வாழ்க்கை சமநிலையுடன் எனக்கு சமமான தளம் இருக்கவும் விரும்புகிறேன்” என்று பூரிப்போடு தெரிவித்துள்ளார் பிரணவ்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *