தனது வருவாய் குறித்து வெளிப்படையாக அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

போர் நெருக்கடிக்கு மத்தியில் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது வருவாய் குறித்த தரவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தமது வருவாய் தொடர்பில்
அரசு ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் தங்கள் வருவாய் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையிலேயே, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமது வருவாய் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய வருவாய் தரவுகள் அனைத்தும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 2020 இருந்த வருவாயில் இருந்து 2021ல் சரிவடைந்துள்ளதுடன், 2022ல் அது மேலும் குறைந்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுத்த பின்னர், முதல்முறையாக ஜெலென்ஸ்கி தமது வருவாய் தொடர்பில் பொதுமக்கள் அறியும் பொருட்டு வெளிப்படுத்தியுள்ளார். 2021ல் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினரின் வருவாய் என்பது 10.8 மில்லியன் hryvnias அதாவது 286,168 அமெரிக்க டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2020ல் இருந்து 12 மில்லியன் hryvnias அளவுக்கு குறைந்துள்ளது. மட்டுமின்றி அரசாங்க பங்கு பத்திரங்கள் சுமார் 142,000 டொலர் தொகைக்கு விற்ற வருவாயும் 2021ல் குறிப்பிடப்பட்டிருந்தது.

2022ல் ஜெலென்ஸ்கி குடும்பத்தினரின் வருவாய் மேலும் 3.7 மில்லியன் hryvnias அளவுக்கு சரிவடைந்துள்ளது. போர் சூழலில், ஜெலென்ஸ்கிக்கு சொந்தமான கட்டிடங்களில் இருந்து பெறப்பட்ட வருவாய் சரிவடைந்ததே காரணமாக கூறப்படுகிறது.

சொத்துமதிப்பு 20 மில்லியன் டொலர்
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் பொருட்டு அரசு ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் தங்கள் வருவாய் தொடர்பான தரவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்திருந்தார்.

மேற்கத்திய நாடுகள் பல ஆயுதங்களும் பொருளாதார உதவிகளும் முன்னெடுத்து வரும் நிலையில், அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி, சர்வதேச நாணய நிதியமும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு உத்தரவாதம் கோரியுள்ளது. உக்ரைனின் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஒழிப்பு அமைப்பும் இது தொடர்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2022ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மொத்து சொத்துமதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரியவந்துள்ளது.

மேலும், ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி இணைந்து பயன்படுத்தும் வங்கிக்கணக்கில் 2 மில்லியன் டொலர்கள் கையிருப்பு வைத்துள்ளனர். அத்துடன் நகைகள் மற்றும் வாகனங்கள் என சுமார் 1 மில்லியன் டொலர் அளவுக்கு மட்டுமே அவரிடம் சொத்தாக உள்ளது என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *