எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.18,000 வரை குறைப்பு… ஒகாயா நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வெஹிகிள் பிராண்டான ஒகாயா EV, தனது அனைத்து எலெக்ட்ரிக் வாகன மாடல்களின் விலைகளையும் கணிசமாக குறைத்து உள்ளது. இந்த சலுகை விலை வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ஒகாயா எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த பிப்ரவரி 2024-ல் ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு ஒகாயா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சற்று மலிவு விலை ஸ்கூட்டர்களாக வைக்கிறது. விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ஒகாயாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இப்போது ரூ.74,899-ல் தொடங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் ரேஞ்சை பெற முடியும்.
இந்த நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலான Freedum slow speed-ன் விலை இப்போது ரூ.74,899 என்ற கவர்ச்சிகரமான விலையில் தொடங்குகிறது. அதே சமயம் Faast F4-ன் விலை இப்போது ரூ.1,37,990-லிருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.1,19,990 என்ற விலையில் கிடைக்கிறது. தள்ளுபடிக்கு பிறகு நிறுவனத்தின் Faast F3 மாடலின் விலை ரூ.1,09,990-ஆகவும், Motofaast-ன் விலை ரூ.1,28,999-ஆகவும், Faast F2F-வின் விலை ரூ.83,999-ஆகவும், Faast F2B-ன் விலை ரூ.93,950-ஆகவும், Faast F2T-ன் விலை ரூ.92,900-ஆகவும் உள்ளது.
இதனிடையே ஒகாயா ஈவி-யின் நிர்வாக இயக்குநர் அன்ஷுல் குப்தா பேசுகையில், எங்களின் தயாரிப்பு மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த அனைத்து மாடல்களின் விலைகளையும் கணிசமாக குறைத்து உள்ளோம். இந்த நடவடிக்கை இந்தியாவில் மக்களிடையே மின்சார வாகனங்களை வாங்கும் எண்ணத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம். மேலும் இந்த முயற்சி எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைய உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
ஒகாயா EV எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது இந்திய வானிலை நிலைமைகளுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. சில மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் மட்டுமே LFP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது NMC பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. LFP பேட்டரிகள் மிகவும் பாதுகாப்பானவை, அதிக வெப்பநிலைகளில் நன்றாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஒகாயா இ-ஸ்கூட்டர்களிலும் BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இது AIS 156 Amendment III ஃபேஸ் 2-ன் கீழ் ICAT சான்றளிக்கப்பட்டது, வலுவான IP67 வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட்-ரெசிஸ்டென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒவ்வொரு ரைடும் பாதுகாப்பானது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.