கேரளா குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி.! அடுத்தது ஸ்ரீரங்கம்.
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள முதலமைச்சர் விமான நிலையத்திற்கு சென்று அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார். பின்பு திறந்தவெளி வாகனத்தில் பயணித்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு, இன்று காலை குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, குருவாயூரப்பனை தரிசித்தார். குருவாயூர் கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வந்த சமயம் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிற்கு தனது ஆசிகளையும் வழங்கினார்.
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, தற்போது 11 நாள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பல்வேறு கோவிலுக்கு சென்று வருகிறார். குருவாயூரப்பன் கோவில் தரிசனத்தை தொடர்ந்து, வரும் ஜனவரி 19ஆம் தேதி கேலோ விளையாட்டு போட்டிகளை துவங்கி வைக்க திருச்சி வரும் பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல உள்ளார். அதற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.