பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி போட்டியிடதடை விதிக்கப்பட்டது. அதனால், அவரது கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிட்டன. அந்த தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபை என அழைக்கப்படும் தேசிய சட்டமன்றம் இரு தினங்களுக்கு முன்னர் கூடியது. அதில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் (72) தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 201 வாக்குகளை ஷெபாஸ் ஷெரீப் பெற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் 24ஆவது பிரதமராக அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான அய்வான்-இ-சதரில், ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துக்கள்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி போட்டியிட்ட 264 இடங்களில் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன், அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது.

முன்னதாக, பொதுத் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான கூட்டணி அரசாங்கத்தில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *