“பிரதமர் மோடி ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்..” 1990 ரத யாத்திரையை நினைவு கூர்ந்த எல்.கே. அத்வானி

ராமர் கோயில் கட்டப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விதியால் தீர்மானிக்கப்பட்டது என்று பாஜக மூத்த தலைவரான எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார். அந்த பணியை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியை விதி தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ‘ராம் மந்திர் நிர்மான், ஏக் திவ்ய ஸ்வப்னா கி பூர்தி’ என்ற தலைப்பில் வெளியாக உள்ள கட்டுரையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘ராஷ்ட்ர தர்மம்’ இதழின் சிறப்புப் பதிப்பில் இந்த கட்டுரை இடம்பெற உள்ளது.

அயோத்தி இயக்கத்தின் முன்னணியில் இருந்த அத்வானி, 33 ஆண்டுகளுக்கு முன்பு தனது ரத யாத்திரை மூலம் தொடங்கிய மிக முக்கியமான பயணத்தை நினைவு கூர்ந்தார். தனது அரசியல் வாழ்க்கையில் இது ஒரு முக்கியப் புள்ளி என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், செயல்பாட்டில், தன்னை மீண்டும் புரிந்துகொள்வதற்கும்” இட்டுச் சென்ற பயணம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 25, 1990 அன்று தொடங்கிய ரத யாத்திரையை குறிப்பிட்ட அவர், நாடு தழுவிய இயக்கமாக மாறியது. அது ராமரின் நம்பிக்கையில் வேரூன்றியது என்றும் அத்வானி நினைவு கூர்ந்தார்.

ரத யாத்திரையின் போது பிரதமர் மோடியின் பங்களிப்பு மற்றும் ஈடுபாடு குறித்தும் அத்வானி தெரிவித்துள்ளார், ராமர் கோயிலை மீண்டும் கட்ட பிரதமர் மோடி ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டாரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் “ இன்று ரத யாத்திரை 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. செப்டம்பர் 25, 1990 அன்று காலை ரத யாத்திரையைத் தொடங்கியபோது, இந்த யாத்திரையை நாடு முழுவதும் ராமர் மீதான நம்பிக்கை ஒரு இயக்கமாக மாறும் என்று எங்களுக்குத் தெரியாது ” என்று அத்வானி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் மோடியை தேர்ந்தெடுத்தார்

76 ஆண்டுகள் பழமையான இந்தி இதழான ‘ராஷ்ட்ர தர்ம’ சிறப்புப் பதிப்பில் ஜனவரி 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ள தனது கட்டுரையில், ரத யாத்திரை முழுவதும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடன் இருந்ததாக அத்வானி குறிப்பிட்டுள்ளார். “அப்போது அவர் மிகவும் பிரபலமாக இல்லை. ஆனால் அந்த நேரத்தில் ராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது பக்தரை (மோடி) தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில், அயோத்தியில் ஒரு நாள் ஸ்ரீராமரின் பிரமாண்டமான கோவில் கட்டப்படும் என்று விதி முடிவு செய்ததாக நான் உணர்ந்தேன்.,” என்று தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்ததாகவும் நினைவு கூர்ந்தார். “ரத யாத்திரையின் போது, பல அனுபவங்கள் என் வாழ்க்கையை பாதித்தன. தொலைதூர கிராமங்களில் இருந்து தெரியாதவர்கள், தேரை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் வருவார்கள். ‘பிராணம்’ செய்து, ராமர் நாமத்தை ஜபித்துவிட்டு செல்வார்கள். ராமர் கோவிலை கனவு கண்டவர்கள் பலர் உள்ளனர்… ஜனவரி 22ம் தேதி கோவில் கும்பாபிஷேகத்தின் மூலம், அந்த கிராம மக்களின் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆசைகளும் நிறைவேறும்,” என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும் “பிரதமர் நரேந்திர மோடி கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது, அவர் நமது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துவார். இந்த கோயில் அனைத்து இந்தியர்களையும் ஸ்ரீ ராமரின் குணங்களை பின்பற்ற ஊக்குவிக்கும் என்று நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா?

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சாமியார்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளன. 96 வயதான அத்வானி அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *