ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார்.
இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார். வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, குழந்தை ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
தொடர்ந்து, பூசாரிகளுக்கு மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை காணிக்கையாக பிரதமர் வழங்கினார். பின்னர், ராமர் கோயிலை அவர் சுற்றிப்பார்த்தார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ஆம் தேதி தொடங்கினார். யாம் விதிகளை கண்டிப்பாக பின்பற்றிய பிரதமர் மோடி, தினமும் போர்வையை விரித்து தரையில் தூங்குவதாகவும், இளநீர் மட்டுமே குடித்து வந்தார்.
அத்துடன், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். குறிப்பாக, ராமருடன் தொடர்புடைய கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தமிழ்நாட்டின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, கோதண்ட ராமர் கோயிலில் நேற்று தரிசனத்தை முடித்து விட்டு, டெல்லி சென்ற பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.