மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி!
பிரதமராக மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்ற பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது மான் கி பாத்தின் 110ஆவது அத்தியாயம் ஆகும். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்பதால், பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி மான் கி பாத்தின் அத்தியாயம் இதுவாக இருக்க வாய்ப்புள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட மகளிர் தினம் குறித்து பேசினார். இந்தியாவின் பெண் சக்தி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை எட்டுகிறது என்று அவர் கூறினார்.
நமது நாட்டில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் ஆளில்லா விமானத்தை பறக்க விடுவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நமோ ட்ரோன் திதி திட்டம் மூலம் அது சாத்தியப்பட்டுள்ளது என்றார். ட்ரோனை ஓட்டும் பெண் சுனிதாவிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது குடும்பம், படிப்பு மற்றும் ட்ரோன் திதி திட்டத்தின் பலன்கள் குறித்து கேட்டறிந்தார்.
“நாட்டின் பெண் சக்தி பின்தங்கிய எந்தத் துறையும் இன்று நாட்டில் இல்லை. பெண்கள் தங்கள் தலைமைத் திறனை வெளிப்படுத்திய மற்றொரு துறை இயற்கை விவசாயம், நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், “மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினம்’. இந்த நாள் வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடிப்பு முதன்மையாக வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.
“கடந்த சில ஆண்டுகளாக, அரசின் முயற்சியால், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை, 250க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருகின்றனர்.உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மோட்டார் பிரசிஷன் குரூப் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இது கென் நதியில் முதலைகளைக் கண்காணிக்க உதவுகிறது.” என்று பிரதமர் மோடி கூறினார்.
ஒடிசாவில் உள்ள கலஹண்டியில் ஆடு வளர்ப்பு கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாக மாறி வருகிறது.இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் ஜெயந்தி மஹாபத்ரா மற்றும் அவரது கணவர் பிரேன் சாஹு ஆகியோரை பிரதமர் பாராட்டினார். அத்துடன், “பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த பீம் சிங் பவேஷ் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது பணி அவரது பகுதியின் முசாஹர் சாதி மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. முசாஹர்கள் மிகவும் பின்தங்கிய சமூகமாக உள்ளனர். பீகார். பீம் சிங் பாவேஷ் இந்த சமூகத்தின் குழந்தைகளின் கல்வியில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அவர் எட்டாயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார்.” எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், டிடி செய்திகள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் யுடியூப் சேனல்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.