வரும் 14-ம் தேதி அபுதாபி இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..!
பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் அங்கு தடபுடலாக நடந்து வருகின்றன.
பயணத்தின் முதல் நாளான 13-ம் தேதி அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் அஹ்லான் மோடி (ஹலோ மோடி) எனும் நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதைத் தொடர்ந்து, 14-ம் தேதி அபுதாபி அருகே முரேகாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 27 ஏக்கரில் ரூ. 888 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலாகும்.
உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோவில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பி.ஏ.பி.எஸ்) எனும் அமைப்பு அபுதாபி கோவிலை கட்டி வருகிறது. இக்கோவிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோவில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.