இன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று மார்.19 ம் தேதி நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். மைதானத்திலேயே ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது.ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் மோடி, மதியம் 1.30 மணிக்கு கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் சேலம், நாமக்கல், கரூர் மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர்களுக்கான பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார்.இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார்.சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.