பிரதமர் நரேந்திரமோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை நேற்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் பங்கேற்க தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.