Priyamani: பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு..அனைத்திற்கும் காரணம் அந்த ஒரு படம் தான்..ப்ரியாமணி பேச்சு..!
தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் பிரியாமணி. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார் ப்ரியாமணி. அதைத்தொடர்ந்து பாலு மகேந்திராவின் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான அது ஒரு கனா காலம் என்ற திரைப்படத்தில் நடித்தார் ப்ரியாமணி.
என்னதான் இவ்விரு படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் பாரதிராஜா மற்றும் பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ப்ரியாமணிக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் தான் பருத்திவீரன். அமீரின் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ப்ரியாமணி.
இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் ப்ரியாமணி. அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார் ப்ரியாமணி. இருப்பினும் பாலிவுட் படங்களிலும் நடிக்கவேண்டும் என்ற ஆசை ப்ரியாமணிக்கு இருந்து வந்தது. அந்த ஆசை மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இராவணன் படத்தின் மூலம் ப்ரியாமணிக்கு நிறைவேறியது.
அதைத்தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார் ப்ரியாமணி. இருப்பினும் பேமிலி மென் என்ற வெப் தொடரின் மூலம் பாலிவுட்டில் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்தி கொண்டார் ப்ரியாமணி. மேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான நடிகையானார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட் ரசிகர்களிடம் நான் பிரபலமாகிவிட்டேன். அதைத்தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே நான் மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றேன் என்றார் ப்ரியாமணி. இந்நிலையில் தற்போது ஆர்டிகள் 370, மைதான் என இரு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் ப்ரியாமணி.
மேலும் பாலிவுட்டில் நடிக்க ப்ரியாமணிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றதாம். எனவே இன்னும் சில காலம் தமிழ் படங்களில் ப்ரியாமணியை பார்க்கமுடியுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏனென்றால் பாலிவுட் பட வாய்ப்புகளாக ப்ரியாமணிக்கு வருவதால் தமிழில் அவர் தற்போதைக்கு நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.